கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் துவங்கி பெரும்பாலானோருக்கு அவர்தம் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு , அதற்கான குறுஞ்செய்தி வந்துகொண்டு இருக்கிறது. 1.6 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், சொந்த கார், வாகனம் வைத்து இருப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அரசு தெரிவித்து இருந்தது.
ஏன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரமும் , அந்தந்த குறிப்பிட்ட குடும்ப தலைவிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், தனக்கு ரூ.1000 உரிமை தொகை பெற தகுதி உள்ளது. ஆனால் குறுஞ்செய்தி தவறுதலாக வந்துவிட்டது என்ற குடும்ப தலைவிகள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட குடும்ப தலைவிகள் தங்களுக்கான குறுஞ்செய்தி வந்த உடன் 30 நாட்களுக்குள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், குறுஞ்செய்தி வரவில்லை என்றாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அருகாமையில் உள்ள இசேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.