#JustNow: அக்.1 முதல் 2023 பிப்ரவரி வரை இதற்கு தடை – மாநில அரசு அதிரடி உத்தரவு

கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதித்து அம்மாநில அரசு அறிவிப்பு. 

குளிர்காலத்தில் மாசுபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்க 2022 அக்டோபர் 1 முதல் 28 பிப்ரவரி 2023 வரை நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாசுக்கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று, டெல்லி அரசாங்கம், அதன் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது. அதில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் அக்டோபர் 1 முதல் BS VI வகை பேருந்துகளை மட்டுமே நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

நகரத்தின் வாகன மாசுபாட்டின் சிக்கலைச் சமாளிக்க இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. டெல்லியில் அக்டோபர் முதல் குளிர்கால மாதங்களில் அதிக அளவு காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். ஏனெனில் எரிப்பு மற்றும் வாகன போக்குவரத்து உட்பட பல காரணங்கள் உள்ளன. இதனால், கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, டெல்லியில் நவம்பர் அல்லது டிசம்பரில் 15-20 நாட்களுக்கு மட்டுமே லாரிகள் முதல் மினி டெம்போக்கள் வரை நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் 70,000-80,000 டிரக்குகள் டெல்லிக்குள் நுழைகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரத்திற்குள் அனுமதிக்கப்படும் வாகனங்களில் சிஎன்ஜி வணிக வாகனங்களும் அடங்கும். மின் லாரிகள்; காய்கறிகள், பழங்கள், தானியங்கள், முட்டை, ஐஸ், பால் மற்றும் பிற உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து லாரிகளும், மற்றும் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் டேங்கர்களும் அடங்கும். இந்த தடையால், கனரக வாகனங்களை கையாள்வோருக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என லாரிகள் மற்றும் வணிக வாகன சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அனைத்திந்திய மோட்டார் மற்றும் சரக்கு போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ராஜேந்திர கபூர் கூறுகையில். டெல்லிக்குள் 15-20 நாட்களுக்கு லாரிகள் நுழைவதைத் தடை செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் நான்கு மாதங்கள் நீண்ட காலம் மற்றும் போக்குவரத்துகளை பாதிக்கும் என்று கூறியுள்ளார். மேலும், வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இது அரசாங்கத்தின் வருவாயையும் பாதிக்கும் மற்றும் உணவு, காய்கறிகள் மற்றும் பிற பொருட்களின் விலைகளில் உச்சக்கட்டத்தை எட்டும் என்று தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment