#JustNow: தமிழ்நாடு அரசின் முடிவுக்கு கி.வீரமணி வரவேற்பு!

#JustNow: தமிழ்நாடு அரசின் முடிவுக்கு கி.வீரமணி வரவேற்பு!

அரசமைப்புச் சட்டத்தின் ஜனநாயக உரிமையைக் காக்கும் செயலாகவே இதனைக் கருதவேண்டும் என கி.வீரமணி ட்வீட்.

தமிழக ஆளுநர் விடுத்த வேண்டுகோளை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது மிகவும் சரியான முடிவாகும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,‘நீட்’டிலிருந்து விலக்குக் கோரும் மசோதாவை 2வது முறையாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சர்கள் இருவர் இன்று ஆளுநரைச் சந்தித்து ‘நீட்’ தொடர்பாக வேண்டுகோள் வைத்தபோது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க காலவரையறை கூறமுடியாது என்று ஆளுநர் கூறியிருப்பது, சட்டமன்ற மாண்பையும், ஜனநாயகக் கோட்பாட்டையும், வாக்களித்து ஆட்சியை அமைத்த மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குப் போட்டி அரசு நடத்திட ஆளுநர் தயாராகிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது. இந்த நிலையில், ஆளுநர் விடுத்த விருந்து வேண்டுகோளைத் தமிழ்நாடு அரசு புறக்கணித்தது மிகவும் சரியான முடிவாகும். அரசமைப்புச் சட்டத்தின் ஜனநாயக உரிமையைக் காக்கும் செயலாகவே இதனைக் கருதவேண்டும். தமிழ்நாடு அரசின் மதிப்புறு முடிவை வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

அரசு மட்டுமல்ல, காங்கிரஸ், இ.கம்யூனிஸ்டு கட்சி, இ.கம்யூனிஸ்ட் கட்சி (மா), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியும் ஆளுநர் விருந்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலிப்பதாகும். இதில் ஈடுபட்ட அனைத்துக் கட்சிகளையும் பாராட்டுகிறோம் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube