40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகைகள்! தேய்மானம் காரணமாக எடை குறைவு – கோவில் நிர்வாகம்

40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகைகள் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் விளக்கம். 

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 2-ம் பிரகாரத்திலுள்ள, கருவூலத்தில் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி, வைடூரியம், பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்களை திருவிழா நாட்களில் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நகை மதிப்பீட்டாளர்கள், ஆய்வு மேற்கொண்டதில், நகைகளின் எடை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓய்வுபெற்ற, தற்போதைய குருக்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 30 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கோவில் இணை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகையில் தேய்மானம் ஏற்பட்டு, நகையின் எடை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் அனைத்து இனங்களும் சரியாக உள்ளன என்றும், இந்த விவகாரத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், கோவில் நகைகளின் பாதுகாப்பு குறித்து, பக்தர்களோ, பொதுமக்களோ அச்சம் கொள்ள வேண்டாம்  என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தங்கம், வெள்ளி பொருட்களில் தேய்மானம் காரணமாக ரூ.14,43,254 இழப்பு என நகை மதிப்பீட்டாளர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.