ஜன.5-ல் ரஞ்சிக் கோப்பை., அக்.27-ல் சயத் முஷ்டாக் அலிக் கோப்பை – அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ!

ரஞ்சிக் கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் சீசன் தொடர்பான அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ டொமஸ்டிக்.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பைப் போட்டித்தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ரஞ்சிக் கோப்பை, சயத் முஷ்டாக் அலிக் கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் சீசன் அட்டவணை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)  வெளியிட்டுள்ளது.

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபியின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று நோய் மற்றும் அனைத்து நலன்களையும் கருத்தில் கொண்டு, பிசிசிஐ ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தியது. அதன் பிறகு மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி, ஐபிஎல் டி20 தொடர் முடிந்தபின் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சயத் முஷ்டாக் அலிக் கோப்பைக்கான டி20 தொடர் வரும் அக்டோபர் 27-ம் தேதி தொடங்கும். விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை டிசம்பர் 1 முதல் 29 வரை நடைபெறும். மூன்று போட்டிகளும் இந்த முறை இதே முறையைப் பின்பற்றும்.

விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை போட்டியில் முதல் முறையாக சீனியர் மகளிருக்கான அணியும் பங்கேற்கிறது. இவர்களுக்கு அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதிவரை போட்டிகள் நடக்கின்றன. ரஞ்சி கோப்பை 2021-22 சீசன் இந்த ஆண்டுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஜனவரி 5 முதல் மார்ச் 20 வரை நடைபெறும். இதில் வழக்கம் போல் 38 அணிகள் பங்கேற்கும்.

19 வயதுக்குட்பட்ட ஆண்கள், மகளிருக்கான வினு மன்கட் ஒருநாள் போட்டித் தொடர் வரும் செப்டம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சேலஞ்சர் கோப்பை ஆடவருக்கு அக்டோபர் 25-ம் தேதியும், மகளிருக்கு அக்டோபர் 26-ம் தேதியும் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, 25 வயதுக்கு உட்பட்டோருக்கான சி.கே.நாயுடு கோப்பைக்கான ஒருநாள் தொடர் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. குறிப்பாக ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே, சயத் முஷ்டாக் அலி கோப்பை ஆகியவற்றில் பங்கேற்கும் 38 அணிகளும் 6 குரூப்களாகப் பிரிக்கப்படும். 5 எலைட் குரூப் கொண்ட 6 அணிகளும், 8 அணிகள் கொண்ட ஒரு குரூப்பும் இருக்கும்.

அக்டோபர் 20 முதல் ஆண்களின் உள்நாட்டு சீசன் தொடங்கும் என்றும், ரஞ்சி கோப்பை நவம்பர் 16, 2021 முதல் பிப்ரவரி 19, 2022 வரை மூன்று மாத சாளரத்தில் நடைபெறும் என்றும் வாரியம் கடந்த மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. ஆனால், இப்போது இந்த திட்டங்களை மாற்றி, அடுத்த ஆண்டு ரஞ்சி கோப்பையை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்