ஜல்லிக்கட்டு தீர்ப்பு – இதை கொண்டாட அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உள்ளது – விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வந்த அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. 

கடந்த 2017-ஆம் ஆண்டு, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி  உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின், ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவசர சட்டமும் இயற்றப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வகுத்த அவசர சட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையானது, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது.

இதன் விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுடன் இயற்றப்பட்டதை எடுத்துக்கூறியதோடு, காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை என பல்வேறு வாதங்கள் விரிவாக முன்வைக்கப்பட்டது.

இதன்பின், ஜல்லிக்கட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதன்படி, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு வாதம் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. என கூறி , தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வந்த அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுத்தவர் ஈபிஎஸ் . இதை கொண்டாட அதிமுகவுக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.