என் மனதில் வருத்தம் இருந்தது உண்மை தான் ; கீழே அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்த முதல்வர் …!

அரசு விழாவில் கீழே அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்த முதல்வர்.

இன்று கோவை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்றிருந்தார். விழா நடைபெறும் அரங்கில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களும் வருகை தந்துள்ளார்.

அப்பொழுது அவருக்கு கீழே தான் இருக்கை போடப்பட்டு இருந்துள்ளது. இருப்பினும் அவர் அவரது இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். அப்பொழுது அவரைப் பார்த்த முதல்வர் மேடைக்கு வந்து அமருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பேசிய வானதி சீனிவாசன், இதை நான் அரசு விழாவாக தான் பார்க்கிறேன். முதல்வர் வாக்குறுதி கொடுத்த திட்டங்களை தற்போது நிறைவேற்ற வந்திருக்கிறார். நான் இந்த தொகுதி மக்களின் பிரதிநிதி.

இருந்தாலும் எனக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மூலம் என்னை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து இருந்தார்கள். அது எனக்கு அவமானமாக இருந்தாலும், தனிப்பட்ட என்  அவமானங்களை கடந்து, மக்களின் நலன் முக்கியம் என்பதால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தேன். இருப்பினும் எனக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. கீழே தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இது என் தொகுதியில் நடக்கக்கூடிய அரசு விழா, இருப்பினும் என்னை கீழே அமர வைத்து நடத்துவது தான் அவர்களின் அரசியல் நாகரீகம் என நினைத்துக்கொண்டு நான் அமர்ந்து விட்டேன். என் மனதில் இது குறித்து வருத்தம் இருந்தது உண்மை தான். அப்பொழுது சில அமைச்சர்கள் என்னை பார்த்து முதல்வரிடம் கூறியதை அடுத்து முதல்வர் என்னை மேலே அழைத்து அமர வைத்தார்.

இது என் தொகுதி மக்களுக்கு கிடைத்த மரியாதையாக தான் பார்க்கிறேன். எனக்கு கிடைத்த தனிப்பட்ட மரியாதையாக பார்க்கவில்லை. தொடர்ந்து முதல்வர் வழங்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, இன்னும் மேம்படுத்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal