• தினகரன் தாலியே கட்டாமல் பொண்டாட்டி என கூறுவது தவறு, முதலில் தாலி கட்டட்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதனையடுத்து, விருதுநகர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கூட்டணி கட்சியினருடன் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சிவஞானத்திடம் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தினகரன் தாலியே கட்டாமல் பொண்டாட்டி என கூறுவது தவறு, முதலில் தாலி கட்டட்டும். அதிமுகவில் உழைப்பவர்களுக்குதான் மரியாதை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் வாரிசு பிரச்சனை என் கின்றனர்.அமமுக வேட்பாளர்களில் வாரிசு கிடையாதா? என்றும், அதிமுகவை குறைசொல்வதுதான் அமமுகவினரின் வேலையாக உள்ளதே தவிர, கட்சியை வளர்க்க அவர்கள் வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.