சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிட மாடல் தான்…சாதனை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.!

ஆரியத்தை வீழ்த்தும் சக்தியாக திராவிடம் இருப்பதால் ஆளுநர் பயப்படுகிறார் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் திமுக தலைமையில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை குறித்து பேசினார்.

அப்போது பேசிய முதல்வர் திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிட மாடல் தான் என ஆளுநரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாககூறினார். முன்னதாக தமிழக ஆளுநர் ரவி, திராவிடம் என்பது காலாவதியான கொள்கை என்றும் இதனை உயிர்ப்புடன் வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து பேசிய முதல்வர், சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் இல்லாமல் காலாவதி ஆக்கச் செய்தது திராவிடம் தான் என ஆளுநருக்கு கூறிக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் ஆரியத்தை வீழ்த்தும் சக்தி தான் திராவிடம், இதனால் தான் ஆளுநர் பயப்படுகிறார் என முதல்வர் ஸ்டாலின் இந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

author avatar
Muthu Kumar