இந்தியாவில் சொந்த விற்பனை நிலையங்கள்…டெஸ்லாவின் அதிரடி முடிவு…!

இந்தியாவில் முழுமையாக சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் தலைமையிலான மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக பல சாலைத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும்,அதன் வாகனங்களை விற்கவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதாவது,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் மீதான இறக்குமதி வரியை 40% ஆக குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து,பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்,இந்தியாவில் விரைவில் விற்பனையைத் துவங்கக் காத்திருக்கும் டெஸ்லா, தனது கார்களை எவ்விதமான கூட்டணியும் இல்லாமல் நேரடியாக, தனது வாடிக்கையாளர்களுக்குச் சொந்த கார் ஷோரூம் மூலம் விற்பனை செய்ய எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனை தொடர்பான அன்னிய நேரடி முதலீடு (FDI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டியிருப்பதால், முழுமையாகச் சொந்தமான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான செயல்முறையைக் கண்டறிய டெஸ்லா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.அதன் வாகனங்களை விற்கும் திட்டத்தில் உள்ளூர் ஆதார விதிமுறைகளும் அடங்கும் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.

அதாவது,ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் நேரடியாக விற்பனை மற்றும் வர்த்தகம் செய்ய வரும் போது,ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனையில் 51 சதவீதத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பங்குகளை உள்ளடக்கிய முன்மொழிவுகளைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் மதிப்பில் 30 சதவிகிதத்தை இந்தியாவில் இருந்து பெற வேண்டும்.அதன்படி, டெஸ்லா நிறுவனம் தனது கார்களுக்கான உற்பத்தி பொருட்களில் 30 சதவீதம் இந்தியாவில் இருந்து பெற வேண்டும்.

இதன் காரணமாகவே,முன்னதாக டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சோனா காம்ஸ்டார், சன்தார் டெக்னாலஜிஸ் மற்றும் பார்த் போர்ஜ் ஆகிய மூன்று உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.