இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம்.. அதிபர் டிரம்பால் முடிவுக்கு வந்த பிரச்சனை!

இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகம் இடையே சுமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், கடந்த 1948 -ம் ஆண்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அனால் அதனை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்க மறுத்தது. மேலும், இஸ்ரேல் நாட்டு மக்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவும் தடை விதித்தது.

அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கிடையே நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், பொருளாதாரம், தூதரகம் உள்ளிட்ட எந்த உறவுகளும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகள், தங்கள் உறவில் சுமூக நிலையை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் நாடுகள் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இன்று மிகப்பெரிய முன்னேற்றம் எனவும், எங்கள் இரு பெரிய நண்பர்களான இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையேழுத்தாகியுள்ளது.” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் வெளியிட்ட கூட்டறிக்கையை அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கூட்டறிக்கையில், “இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம் எனவும், இந்த அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை மேம்படுத்தும்” என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு பாலஸ்தீன நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து, இது துரோகமிக்க செயல் என குற்றம்சாட்டியது. அதுமட்டுமின்றி, இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு அரபு நாடுகளில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.