#ViralVideo:”உன் பெயர் முகமதுவா?”-மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடித்தே கொன்ற பாஜக நிர்வாகி?..!

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் இசுலாமியர் என நினைத்து ஜெயின் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை பாஜக நிர்வாகி கடுமையாக தாக்கியதில் முதியவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தின் சிர்சா கிராமத்தில் வசிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பவர்லால் ஜெயின் என்ற 65 வயது முதியவர்,ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பதாருடன் சென்றிந்த நிலையில்,வழி தவறி காணாமல் போய்விட்டார்.இதனையடுத்து,அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனையடுத்து,இரு தினங்களுக்கு பிறகு நீமுச் மாவட்டத்தில் உள்ள ராம்புரா சாலையில் (மானசா காவல்துறையிலிருந்து ஒரு கிமீ தொலைவில்) முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே,பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் தினேஷ்,முதியவர் ஜெயினை கடுமையாக தாக்கி அவரது ஆதார் அட்டையைக் கேட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.அந்த வீடியோவில்,முதியவரை பார்த்து நீ ஒரு முஸ்லிமா?,உன் பெயர் முகமதுவா? ,ஆதார் அட்டை எங்கே? என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து,IPC பிரிவுகள் 304 மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் பாஜக பிரமுகர் தினேஷ் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.மேலும்,வீடியோவை ஆய்வு செய்து வருவதாகவும்,இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வைத்து வீடியோ எடுத்தவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் குஷ்வாஹா தலைமறைவாகிவிட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைமையிலான மாநில அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிது பட்வாரி கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை,ஆதார் அட்டையை காட்டவில்லை என்பதற்காக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.ம.பி.யில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.இதற்கு உள்துறை அமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment