“ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா? அல்லது தனியார் மருத்துவமனையா?” – எம்பி ரவிக்குமார் கண்டனம்..!

“ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா? அல்லது தனியார் மருத்துவமனையா?” – எம்பி ரவிக்குமார் கண்டனம்..!

புதுச்சேரியில் உள்ள பிரபல ஜிப்மர் மருத்துவமனைக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சியின் போது 1872 ஆம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனை நிறுவப்பட்டது.1964 ஆம் ஆண்டுதான் ஜிப்மர் மருத்துவமனை என்ற பெயர் மாற்றம் கண்டது.இதனையடுத்து, இந்த அரசு மருத்துவமனை தற்போது வரை மருத்துவத் துறையில் பல்வேறு முத்திரைகளைப் பதித்து வருகிறது.

இந்நிலையில்,ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா? என்று எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“ஜிப்மர் மருத்துவமனையில் மாதத்துக்கு 2499/- ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை வழங்கப்படுமென்றும், வெளிப்புற நோயாளியாக சிகிச்சைபெற வருபவர்கள்கூட தங்களது வருமானத்தை மெய்ப்பிப்பதற்கு பிபிஎல் (BPL)ரேஷன் கார்டை கையோடு எடுத்துவர வேண்டுமென்றும் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

எல்லாவிதமான சிகிச்சைகளுக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது.ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா? சிகிச்சை பெற வரும் நோயாளி கையோடு ரேஷன் கார்டை எடுத்துவர வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமின்றி சட்ட விரோதமானதும் கூட.

இந்த உத்தரவைப் பிறப்பித்த இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டுமென ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்”,என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube