“அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவில்லை; ஆதரிக்கவும் மாட்டேன்” – முத்தையா முரளிதரன்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படமான “800” படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுகுறித்து முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு “800” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளதாகவும், தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், மக்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் எவ்வளவு அட்டகாசமான நடிப்பையும், படத்தையும் விஜய் சேதுபதி கொடுத்தாலும் சரி, உங்கள் படம் பார்க்க இனி திரையரங்கம் செல்ல மாட்டோம் என ட்விட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹஷ்டாக்கை ட்ரண்ட் செய்து வந்தனர்.

எதிர்ப்புகள் அதிகளவில் கிளம்பிய நிலையில், படக்குழுவினர் இதுகுறித்து விளக்கமளித்தனர். இந்தநிலையில், இந்த படம் குறித்த அறிக்கையை முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், என்னை தமிழினத்துக்கு எதிரானவர் போல் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. பள்ளிக்காலம் முதலே தமிழ் வழியில் படித்துவந்தவன், எனக்கு தமிழே தெரியாது என்பது தவறான செய்தி என தெரிவித்தார்.

மேலும், அரசியல் காரணங்களுக்காகவே ஒருசிலர் என்னை எதிர்த்து வருவதாக கூறிய அவர், இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? எனவும் கூறினார். இலங்கையின் அணியில் இடம் பெற்று சாதனை படைத்த காரணத்தால் என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறதாகவும், இதே நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் இந்திய அணியில் இடம் பெற முயற்சித்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மலையகத் தமிழனான நான் ஈழத் தமிழர்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்துள்ளதாகவும், போர் முடிந்த பிறகு மக்களுக்கு நாள் செய்த உதவிகள் அதிகம் என்றும், எனது சாதனைகளை மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த படம் எடுக்க சம்பதித்தேன் என தெரிவித்துள்ளார்.