,

ஒரு முதல்வருக்கு இது அழகா? – வீடியோ வெளியிட்ட அண்ணாமலை

By

annamalai

ஐந்து கட்சிகள் மாறிவந்த ஒருவரைக் காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்டப் பேச்சாளர்போல பேசுவது முறையா? என அண்ணாமலை கேள்வி. 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை குறித்து நேற்று வீடியோ மூலம் தனது கண்டனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வரின் பேச்சு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தொட்டு பார், சீண்டி பார் இதைப்போன்ற வார்த்தைகள் திராவிட முன்னேற கழக மேடைகளில் பலமுறை கேட்டிருப்போம். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தலைவர்களை திட்டுவதற்கு எந்த விதத்திற்கு கூட செல்வார்கள். ஆனால், இந்த வார்த்தையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது என்னவென்று சொல்வது.

எட்டரை கோடி மக்களுக்கு முதலமைச்சராக இருக்க கூடிய நீங்கள் இவ்வாறு பேச தமிழகத்தில் என்ன நடந்துவிட்டது. இதே கேசில் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொன்னீர்கள். இன்றைக்கு 7 ஆண்டுகள் களைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வராக நீங்கள் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், யாரோ ஒரு குற்றவாளியை பாதுகாக்க உங்கள் பதவியை நீங்கள் அடமானம் வைத்திருப்பதாக தமிழக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின் நடந்த கூத்துக்களை பார்த்திருக்க வேண்டும். செந்தில் பாலாஜி இருந்த ஐசியூ யூனிட்டே அமைச்சரவை மீட்டிங் நடக்கும் இடம் போல் இருந்தது.  ஐந்து கட்சிகள் மாறிவந்த ஒருவரைக் காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்டப் பேச்சாளர்போல பேசுவது முறையா? தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்தபோதுகூட வாய் திறக்காத நீங்கள், கரூரில் 26.05.2023 அன்று சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டபோது, கண்டனம்கூடத் தெரிவிக்காத நீங்கள், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டவருக்காக இப்படிப் பொங்குவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா?

சி.பி.ஐ விசாரணைக்கு முன், மாநில அரசின் அனுமதி வேண்டும் என்று அவசர அவசரமாக முடிவெடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில், அதாவது, மத்தியில் பா.ஜ.க ஆட்சியிலுள்ளபோதே எத்தனை முறை சி.பி.ஐ விசாரணை கோரியிருக்கிறீர்கள் என்பது நினைவிருக்கிறதா?

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எத்தனை சி.பி.ஐ விசாரணை கோரிக்கைகள், நீங்கள் இப்போது ஆளுங்கட்சியான பின்பு, சி.பி.ஐ உங்கள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே வர வேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்திவரும் ஆட்சியின் அவலங்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

நீங்கள் எட்டரை கோடி தமிழ் மக்களுக்கான முதல்வரா அல்லது உங்கள் குடும்பத்துக்கும் உங்களைச் சுற்றியிருக்கும் குறுகிய வட்டத்துக்குமான முதல்வரா என்பதை நீங்கள் முடிவுசெய்துகொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.