#IPL2023: ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! புதிய பதவியில் பிராவோ – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு

டுவைன் பிராவோ சென்னை அணியின் வீரராக அல்லாமல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, அடுத்தாண்டு வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டார். சென்னை அணி பிராவோவை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மினி ஏலத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் டிச.23ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் பட்டியலில் டுவைன் பிராவோவின் பெயர் இடம்பெறவில்லை. எனவே, சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிராவோ ஏலத்தில் பங்கேற்கமால் இருப்பது சென்னை ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டராக இருந்த டுவைன் பிராவோ, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வீரராக அல்லாமல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் டுவைன் பிராவோவை சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளதால், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கருதப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்திருக்கும் 39 வயதாகும் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற போகிறாரா என ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.

பிராவோ 2011-ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வந்தார். 2011, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் வெற்றிகளிலும், 2014 இல் சாம்பியன்ஸ் லீக் டி20 வெற்றியிலும் அவர் ஒரு அங்கமாக இருந்தார். ஐபிஎல் சீசனில் இரண்டு முறை (2013 மற்றும் 2015) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சென்னை அணிக்கு முன்பு மும்பை அணியில் விளையாடி இருந்தார் பிராவோ.

பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 144 போட்டிகளில் விளையாடி 168 விக்கெட்டுகளை வீழ்த்தி 1556 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மொத்தம் 161 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பிராவோ. பிராவோ 130 ஸ்டிரைக் ரேட்டில் 1560 ரன்களை குவித்து, பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

எனவே, மிக நீண்ட ஆண்டுகளாக சென்னை அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அனைவரையும் கவர்ந்த பிராவோ, வரும் ஐபிஎல் தொடரில் பந்துவீச்சு பயிற்சியாளராக களமிறங்குகிறார். இதே போன்று, கைரான் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment