#IPL BREAKING: கேமரூன் கிரீன் அதிரடி சதம்..! பிளே ஆப் ரேஸில் முந்தி சென்ற மும்பை இந்தியன்ஸ்.!

ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs SRH போட்டியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

ஐபிஎல் 2023 தொடரின் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 83 ரன்களும், விவ்ராந்த் சர்மா 69 ரன்களும் குவித்தனர். மும்பை அணி சார்பில் ஆகாஷ் மத்வால் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கத்தில் மும்பை அணியில் முதலில் களமிறங்கிய இஷான் கிஷன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா மற்றும் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேமரூன் கிரீன் சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் விளாசினார்.

கிரீனுடன் இணைந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் அடித்த நிலையில், 56 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் சூர்யகுமார் யாதவ் களமிறங்க, கேமரூன் கிரீன் இறுதிவரை நின்று அதிரடியாக சதமடித்து வெற்றி இலக்கை எட்டச்செய்தார்.

முடிவில், மும்பை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 100* ரன்களும், ரோஹித் சர்மா 56 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25* ரன்களும் குவித்தனர்.

தற்பொழுது நடைபெறவுள்ள குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவினால் மும்பை அணி பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.