ஐபிஎல் 2020: பி.சி.சி.ஐ-யின் மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா.!

ஐபிஎல் 2020- க்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பி.சி.சி.ஐயின் மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளதால் பங்கேற்கும் 8 அணி வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அங்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டனர். பின்னர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, நெகட்டிவ் வந்தால் மட்டுமே பயிற்சி ஆட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது ஒரு சில அணிகள் தங்களது பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, துபாயில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில் தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஐபிஎல்க்காக எமிரேட்ஸில் இருக்கும் பி.சி.சி.ஐ-யின் மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஐ.பி.எல் இல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மருத்துவ ஆணையத்தின் உறுப்பினருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று மட்டும் 735 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று ரசிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொரோனா கண்டறியப்பட்ட சென்னை அணி வீரர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்