சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர் விமான படை தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலையத்தின் இயக்குநர் திரு. செந்தில் வளவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பயணிகளுக்கென தனியாக யோகா வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஆதியோகி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பங்கேற்று யோகா கற்றுக்கொண்டனர். அதேபோல், ஐ.என்.எஸ் அக்ரானி, விமான படை கல்லூரி, வெள்ளலூரில் உள்ள சிறப்பு அதிரடிப் படை வளாகம் போன்ற இடங்களில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.
இதுதவிர, கற்பகம் கல்லூரி, இந்துஸ்தான் கலை கல்லூரி, எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் சத்குருவால் வடிவமைக்கப்பட்ட யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முதுகு தண்டும், நரம்பு மண்டலமும் வலுபெறும். மன அழுத்தம் குறையும், உடல் மற்றும் மன நலன் மேம்படும்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 1-ம் தேதி முதல் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகுப்புகள் இம்மாதம் முழுவதும் நடத்தப்படும். உங்கள் இருப்பிடத்திலேயே யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள் Isha.co/idysessionrequest என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.
இன்று உலகம் முழுவதும் 9-வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப் படை வீரர்களுக்கு இன்று யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது.