#Election2021: நாளை தேர்தல்.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இந்த தேர்தலில் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணிவரை நடைபெறும். இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், 10,830 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் அசம்பாவிதங்களை தடுக்க இந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், வாக்குச்சாவடிகளில் மக்கள் சிரமின்றி வாக்களிக்கவும், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார், துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,20,807 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

கடந்த வாரம் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொறிக்கும் பணி நடந்து முடிந்ததை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக பிரித்து ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், காவல்துறை பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.