இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 270 ரன்கள் என்ற இலக்கில் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி 65 ரன்கள் குவித்தது. விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இறுதிவரை களத்தில் இருந்தனர். இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது. 49.1 ஓவர்களில் 248 ரன்களை அடித்த இந்திய அணியை, 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும், சுப்மன் கில் 37 ரன்களும், கேஎல் ராகுல் 32 ரன்களும், ரோஹித் சர்மா 30 ரன்களும் குவித்துள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீரராக ஆடம் ஜம்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்று ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றது.