மார்ச் 4-ம் தேதி மறைமுகத் தேர்தல்.. நாளை மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்து, மேயர்களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில், பிப்ரவரி 19-ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் இதுபோன்று 21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும் அறிவித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் ஆணையர் வெளியிட்டுயிருந்தார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம், கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, செலவினங்களை கண்காணிப்பது, பறக்கும் படை அமைத்தல், பதற்றம் நிறைந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.