இந்தியாவின் நிலை இதயத்தை உலுக்குகிறது – அமெரிக்க துணை அதிபர் கமலா!

இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்கா எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலை இதயத்தை உலுக்கும் விதமாக இருக்கிறது எனவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது மற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, இந்தியாவிற்கும் பிற நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உதவிகளும் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் இந்தியாவிற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், உங்கள் பலருக்கும் தெரியும் எனது குடும்பத்தின் தலைமுறை இந்தியாவில் இருந்து வந்தது எனவும், என் அம்மா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர், எனது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் இந்தியாவில் வசித்து வருகிறார்கள் என்பதும் நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்தியாவில் நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது என் இதயத்தினை நொறுக்கும் விதமாக உள்ளது என கூறியுள்ளார். மேலும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் நலன் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியதும் இந்திய பிரதமருடன் அதிபர் ஜோ பைடன் அவர்கள் தொலைபேசியில் இது குறித்து கலந்துரையாடியதாகவும், அதை தொடர்ந்து ஏப்ரல் 30 க்குள் அமெரிக்க ராணுவம் மற்றும் பொதுமக்கள் இந்தியாவிற்கு தேவையான நிவாரணங்களை அனுப்ப துவங்கி விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவிற்கு தேவையான பேரிடர் காலத்தில் இந்தியா தங்களுக்கு உதவியதாகவும், இந்தியா நமது நண்பன் எனும் அடிப்படையில் அமெரிக்கா இந்தியாவிற்கு தேவையான உதவிகளை தற்பொழுது செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து இந்தியாவிற்கு தேவையானவற்றை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal