கண்கலங்கிய இந்தியாவின் ஒலிம்பிக் வீராங்கனைகள் – ஆறுதல் கூறிய பிரதமர்…!

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணியினருக்கு,பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்..

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி, பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.இதனால்,பதக்க வாய்ப்பை இந்திய மகளிர் ஹாக்கி அணி இழந்த நிலையில்,வீராங்கனைகள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர். எனினும்,முதல்முறையாக ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால், தோல்வியுற்ற நிலையிலும் பலரும் இந்திய மகளிர் அணியின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்:

அதன்படி,இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டோம்.நமது மகளிர் ஹாக்கி அணியின் சிறந்த செயல்திறனை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். அவர்கள்  தங்களால் முடிந்ததை முழுவதும் வழங்கினர். அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் குறிப்பிடத்தக்க தைரியம், திறமை மற்றும் நெகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த சிறந்த அணியால் இந்தியா பெருமை கொள்கிறது.”,என்று பதிவிட்டிருந்தார்.

ஆறுதல்:

இந்நிலையில்,டோக்கியோவில் உள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி அவர்கள்,தொலைபேசியில் தொடர்பு கொண்டு,கிரேட் பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் வெண்கலப் பதக்க வாய்ப்பை இழந்தாலும்,ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதித்தது குறித்து நாடு பெருமைப்படுவதாகக் கூறினார்.இந்த உரையாடலின் போது,மகளிர் அணியினர் கண்ணீர்விட்டு கலங்கினர்.

பல வருடங்களுக்கு பிறகு:

மேலும்,இது தொடர்பாக பிரதமர் கூறியதாவது:”கேப்டன் ராணி ராம்பால் தனது கண்ணுக்கு அருகில் நான்கு தையல்கள் இருப்பதாக கூறினார். அவர் இப்போது நன்றாக இருக்கிறார் என்று நம்புகிறேன்,தயவுசெய்து அழுகாதீர்கள்,என்னால் கேட்க முடிகிறது. நாடு முழுவதும் உங்களைப் பற்றி பெருமை கொள்கிறது.

உங்கள் முயற்சியால் இந்தியா ஹாக்கி பல வருடங்களுக்குப்  பிறகு பேசப்படுகிறது.கடந்த ஐந்து-ஆறு வருடங்களாக நீங்கள் உழைத்து விட்டீர்கள்.உங்கள் முயற்சி ஒரு பதக்கத்தை அளிக்காமல் இருக்கலாம், ஆனால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.இதற்காக வீரர்களையும் பயிற்சியாளரையும் நான் வாழ்த்துகிறேன்.” என்று கூறினார்.

மேலும்,ஹாக்கி அரையிறுதி போட்டியின்போது அர்ஜென்டினாவின் அகுஸ்டினா கோர்செலனியுடன் மோதி,இந்தியாவின் நவநீத் கவுர் பெற்ற காயங்கள் பற்றியும் பிரதமர் விசாரித்தார் என்பது குறிப்பிடதக்கது.