அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் வரவேற்பு.

நன்கு நாட்களுக்கு அரசு முறை சுற்று பயணமாக நேற்று டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி அங்கு சென்றடைந்தார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ருஸ் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்கா அரசு உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் விமான நிலையத்தில் இந்திய தேசிய கொடியுடன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்பயணத்தின் முதல் அலுவலாக துணை அதிபர் கமலா ஹாரிஸ்-ஐ பிரதமர் சந்தித்து பேசவுள்ளார். இதன்பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்கிறார். சுற்று பயணத்தின் இறுதி கட்டமாக ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

முன்னதாக டெல்லியில் புறப்படும்போது தனது பயணத்தின் நோக்கங்கள் குறித்து பிரதமர் மோடி பதிவிட்டியிருந்தார். அதில், அதிபர் பைடனுடன் பிராந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேச உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தோ பசிபிக் பகுதியில் மேற்கொள்ளவுள்ள செயல்பாடுகள் குறித்து குவாட் அமைப்பின் தலைவர்களுடன் பேச உள்ளதாகவும் கூறியிருந்தார். பயங்கரவாதம், கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டியிருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்