இந்தியர்கள் விசா இல்லாமல் இந்த 16 நாடுகளுக்கு செல்லலாம் – மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்.!

16 நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று நடைபெற்ற மாநிலங்களவையில் இந்தியர்களுக்கான விசா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஈரான், இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட 43 நாடுகளில் வருகையின் போது உடனடி விசா வழங்கப்படுகிறது. இலங்கை, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட 36 நாடுகளில் இ-விசா வழங்கப்பட்டு வருகிறது என்று வெளிவிவகார அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்தார். இந்திய சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவு வழங்கும் 16 நாடுகள் உள்ளன என்றும் முரளீதரன் கூறினார்.

இதில், பார்படாஸ், பூடான், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் எஸ்.ஏ.ஆர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா ஆகியவை இந்திய சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விசா இல்லாத இலவச நுழைவை வழங்குகின்றன.

இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் விசா தேவைப்படாத நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு பயணத்தை இந்தியர்களுக்கு எளிமையாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்