ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி! இன்று இலங்கையுடன் கடைசி டி 20…

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று தொடரைக் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நடந்த 2 ஆட்டங்களையும் இந்தியா வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில் 3-வது ஆட்டம் இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தையும் வென்று தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா களமிறங்கவுள்ளது.

கட்டாக்கில் முதல் ஆட்டத்தில் இலங்கை 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்தூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இலங்கையை 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்து இந்தியா வெற்றி கண்டது. எனவே 3-வது ஆட்டத்தை அதேபோல வெற்றியுடன் முடிக்க இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்தத் தொடருக்குப் பிறகு இந்தியா நேரடியாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒரு நாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. எனவே இந்தக் கடைசி ஆட்டத்தை இந்தியா நல்லதொரு பயிற்சி ஆட்டமாக எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 2 ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக ரோஹித் சர்மா 2-வது ஆட்டத்தில் வெளுத்து வாங்கினார். 2-வது ஆட்டத்தில் அவர் 43 பந்துகளில் 118 ரன்களைக் குவித்து ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரின் உலக சாதனையையும் (35 பந்துகளில் சதம்) அவர் சமன் செய்தார். அதைப் போலவே கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோரும் அபாரமாக ஆடி வருகின்றனர். மணிஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அணியின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கின்றனர்.

கடந்த 2 ஆட்டங்களிலும் கே.எல். ராகுல் அரை சதமடித்து தேர்வாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார். 2-ம் ஆட்டத்தில் தோனி, பேட்டிங் வரிசையில் முன்னதாக வந்து களமிறங்கி 28 ரன்களைக் குவித்தார். 3-வது ஆட்டத்திலும் அவரது பேட்டிங் வரிசையில் மாற்றமிருக்கும் என்று தெரிகிறது.

இதேபோல பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் மிரட்டி வருகின்றனர். யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இலங்கை பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகின்றனர். 2 ஆட்டங்களிலும் இவர்கள் இலங்கையின் பெரும்பாலான விக்கெட்களை வீழ்த்தி அவர்களது ரன் குவிப்புக்குத் தடையாக உளளனர். அதைப் போலவே வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சும் இந்திய அணிக்கு பலம் சேர்த்து வருகிறது. இந்த நிலையில் இந்தத் தொடரை இந்தியா வென்று விட்டதால் மும்பை ஆட்டத்தின்போது இளம் வீரர்கள் பசில் தம்பி, வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. மொத்தத்தில் தொடரைக் கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய இந்தியா முனைப்புடன் களமிறங்குகிறது.

அதே நேரத்தில் இலங்கை அணி, டி20 தொடரில் ஆறுதல் வெற்றியைத் தேடும் நிலை உள்ளது. அந்த அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கையின் உபுல் தரங்கா, குசால் பெரேரா, திக்வெலா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதேபோல் நுவன் பிரதீப், திசரா பெரேரா, விஷ்வா பெர்னான்டோ, தசுன் ஷனகா உள்ளிட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள் தங்களது அணிக்கு ஆறுதல் வெற்றியைத் தேடித் தரும் நோக்கத்தில் களமிறங்குகிறார்கள்.

source: dinasuvadu.com

Leave a Comment