#BREAKING: காப்பீட்டுத்தொகை உயர்வு.. காவல் பணியாளர்களுக்கு சிறப்பு படி – முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருட்கள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து உரையாற்றினார். இதன்பின் காவல்துறையில் 78 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குறிப்பாக காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இரவு பணிக்கு செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து காவல் பணியாளர்களுக்கும் சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநிலங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவேண்டிய நிலை மாற்றப்படும். தமிழகம் முழுவதும் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆளில்லா விமான அலகு காவல்படை பிரிவு ரூ.1.20 கோடி மதிப்பில் விரிவு செய்யப்படும். சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க “பருந்து” என்ற செயலி ரூ.33 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து “போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக” சீரமைக்கப்படும் என்றும் சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்