#Breaking : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்.!

சசிகலா புஷ்பா வீட்டை தாக்கியது குறித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தூத்துக்குடியில், அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவன் அண்மையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் தூத்துக்குடி வந்து திமுகவை பற்றி தவறாக பேசினால், நாங்களும் அதே மேடையில் ஏறுவோம். என பேசியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, பாஜக சார்பில் தூத்துக்குடி அபிராமி மஹாலில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் முன்னாள் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், எங்கள் தலைவர் அண்ணாமலை பேசுவதை தடுக்க மேடையேற புறப்புடுபவர்களின் கால்கள் இருக்காது. பேசினால் நாக்கு இருக்காது என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இதனை அடுத்து, தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டில் சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்ட காரையும் தாக்கியுள்ளனர். இதில் கார் மற்றும் வீட்டு கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் பகுதி காவல்நிலையத்தில் தூத்துக்குடி பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, 9 பேர் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையில் அளித்த புகாரில் முறையான நடவடிக்கை  இல்லை என்று இன்று பாஜகவினர் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இருந்து ஊர்வலமாக திமுக அமைச்சர் கீதாஜீவை வீட்டை முற்றுகையிட முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பாரபரப்பான சூழல் நிலவுகிறது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment