அச்சப்பட வேண்டாம்…சிறுமிக்கு ஆறுதல் அளித்த முதல்வர் ஸ்டாலின் …!

சேலத்தில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த ஜனனி சிறுமிக்கு முதல்வர் ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

சேலம்,அரிசிப்பளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார்-ராஜலட்சுமி தம்பதியின் மகளான ஜனனி என்ற 14 வயது சிறுமி,சிலம்பம்,வில்வித்தை, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இச்சிறுமிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளன.தந்தை கைவிட்ட நிலையில்,தாயின் உதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இதனால்,போதிய வருமானம் இல்லாததால்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவிடுமாறு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதல்வர் ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார்.மேலும்,தைரியமாக இருக்குமாறும்,சிகிச்சை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் பேசியிருப்பதாகவும் அச்சிறுமியிடம் முதல்வர் கூறினார்.

இதுகுறித்து,அலைபேசியில் முதல்வர் கூறியதாவது:”தைரியமாக இருங்கள்,எல்லாம் சரியாகிவிடும்.மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடமும் பேசியுள்ளேன்”,என்று ஆறுதல் கூறினார்.