முக்கிய அறிவிப்பு – இதை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  தமிழகத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1966, பிரிவு-5ண் கீழ் 2019ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான பிளாஸ்டிக் தாள்/உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோல் தட்டுகள். பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள். பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்கள்.

மேலும், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில் மரப்பொருட்கள், காகிதக் குழல்கள், துணி/காகிதம்/சணல் பைகள், காகித்துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம்.

இந்த நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்