இளையராஜாவை அனுமதிக்க முடியாது – பிரசாத் ஸ்டுடியோ திட்டவட்டம்.!

இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேட்ட நிலையில், பிரசாத் ஸ்டுடியோ மறுப்பு தெரிவித்துள்ளது.

இசைஞானி இளையராஜா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். சமீபத்தில் ஸ்டுடியோவின் உரிமையாளர்கள், இளையராஜாவை வெளியேற்றியதுடன், வழக்கும் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, தன்னை ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை கொடுக்குமாறு ஸ்டுடியோ உரிமையாளர்களான சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இளையராஜா தரப்பில், 40 ஆண்டுகளாக இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் பணியாற்றியதால், ஒருநாள் தியானம் செய்துவிட்டு பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது என்று பிரசாந்த் ஸ்டுடியோவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவை ஸ்டூடியோவில் அனுமதிக்க முடியாது என்று பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வழக்கறிஞரை அனுமதிக்கலாம் என தெரிவித்த நீதிபதி இது குறித்து இரு தரப்பும் நாளை தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதித்தால் இழப்பீட்டை இளையராஜா வலியுறுத்தக் கூடாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்