பணிக்கு வரவில்லை என்றால் இடமாற்றம் செய்யமாட்டேன் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் – அமைச்சர் துரைமுருகன்

என் மக்களுக்கு தொண்டு செய்யாதவர்களை பழி வாங்குவேன் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தொடங்கி வைத்தார். சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,500 மதிப்பிலான மளிகை பொருட்களை இலவசமாக வழங்கினார். பின்னர் கொரோனாவால் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

இதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவது இல்லை என புகார் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், மருத்துவர்கள் சரியாக பணிக்கு வரவில்லை என்றாலும் அல்லது பணி செய்யவில்லை என தெரியவந்தாலும் இட மாற்றம் செய்யமாட்டேன், வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்று எச்சரித்தார்.

நான் யாரையும் பழிவாங்க மாட்டேன், என் மக்களுக்கு தொண்டு செய்யாதவர்களை பழி வாங்குவேன். அதுதான் என்னுடைய சுபாவம். எனவே, எந்த பிரச்சனை என்றாலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். நான் வரவேண்டிய அவசியமில்லை, தொலைபேசியிலேயே விவகாரம் முடிந்து விடும் என கூறினார்.

மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதாலேயே கொரோனா வந்தபோதும் தான் உயிர் பிழைத்ததாக தெரிவித்தார். பள்ளிகள் தற்போது திறந்துள்ளதால் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்