ஆளுநர் தவறும் பட்சத்தில் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் – மநீம

கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் ட்வீட். 

தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும, ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே அரசியல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக நீட்தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர்  திருப்பி அனுப்பியாதிலிருந்து இந்த கருத்து வேறுபாடு தொடர்ந்து வருகிறது.

நீட் விலக்கு மசோதா 

இதனையடுத்து தமிழக சட்ட மன்றத்தில் தமிழக அரசு மீண்டும் நீட் மசோதாவை தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவது திமுகவினர் மத்தியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என எம்.பி டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து லோக்சபாவில் திமுக எம்பிக்கள் ஆளுநரை திரும்பப் பெறக்கோரி தொடர்ந்து  முழக்கம் எழுப்பினர்.

மக்கள் நீதி மய்யம் ட்வீட் 

இது குறித்து மக்கள் நீதி மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆளுநரை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதனால் இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்ப வேண்டும்.  இதற்கு உரிய கால அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்யவேண்டும். ஆளுநர் தவறும் பட்சத்தில் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.’ என பதிவிட்டுள்ளனர்.