தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம் என்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் கடிதம்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில், தமிழக அரசின் முதலமைச்சர் எனும் மிகப் பெரும் பொறுப்புக்கு நான், உங்கள் அளவற்ற அன்பினால், அதில் விளைந்த ஆதரவினால், என் மீது நீங்கள் என்றும் வைத்திருக்கிற நிலையான நம்பிக்கையினால் பதவி ஏற்றிருக்கிறேன்.

முழு நேர ஊழியனாக என்னைக் கருதிக் கொள்கிறேனே தவிர, முதலமைச்சராகக் கருதவில்லை. சிலப்பதிகாரத்தில் ‘மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்’ என்று சேரன் செங்குட்டுவன் சொல்வதை இளங்கோ அடிகள் குறிப்பிடுவதைப் போல, ஆட்சிப் பொறுப்பு என்பது மலர் மஞ்சமல்ல, அது முள்ளாலான படுக்கை.

இதை மனத்தில் வைத்து தமிழகத்தில் மீண்டும் முன்னேற்றப் பணிகளை முயல் வேகத்தில் முடுக்கி விடும் தலையாய பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன் என்பதை உங்கள் அனைவர்க்கும் உணர்த்திட விரும்புகிறேன். தமிழகம் பற்றி நான் வளர்த்துக் கொண்டிருக்கும் கனவுகளை ஒன்று விடாமல் நிறைவேற்றுகிற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதாக எண்ணிப் பெருமிதம் அடைகிறேன்.

தமிழகத்தைத் தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே நான் எடுத்திருக்கின்ற சூளுரை. இந்திய அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மாநில உரிமைகளை எந்த நிலையிலும் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் நிர்வாகம் செய்வது நமது நோக்கம்.

கடந்த பத்தாண்டுகளாக ஏமாற்றங்களையே எதிர்கொண்ட மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். கடந்த காலத்தை நினைத்து வசைபாடி காலத்தைக் கழிப்பதில் எந்தப் பயனும் இல்லை. இலையுதிரைக் குறை சொல்வதைவிட, வசந்தத்தை வரவழைக்கப் பாடுபட முற்படுவது பயனுள்ள செயல்.

கொரோனா சூழலில் நிர்வாகப் பொறுப்பை நாம் ஏற்றிருக்கிறோம். இத்தருணத்தில் நாம் எத்தகைய விழிப்புணர்வுடன் இருக்கிறோம் என்பது முக்கியம். நெருக்கடியைத் தவிர்க்கும் தனி மனித இடைவெளி, முகக் கவசம் அணிவது நம்மைக் காத்துக் கொள்ள நாம் எடுக்கிற முன்னெச்சரிக்கை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

எல்லா வகைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டுத் தமிழகத்தைத் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். எழுச்சி பெற்ற தமிழகத்தை நமது தலைமுறை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதைப் பொதுமக்களின் ஒத்துழைப்போடும், உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒத்துழைப்போடும், அலுவலர்களின் ஒருங்கிணைப்போடும் நிறைவேற்றுவோம் என்ற உயர்ந்த நம்பிக்கையுடன் உங்களோடு இணைந்து பணியாற்றவிருக்கிறேன்.

தமிழக மக்கள் தந்துள்ள வெற்றியை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கி, அவர் கற்றுத் தந்த அரசியல் – நிர்வாக அனுபவத்தின் துணைகொண்டு, சவால்களையும் நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிர்கொண்டு, தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என நான் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்