“தந்தையின் ஆசிர்வாதத்தால் 5 விக்கெட்களை வீழ்த்தினேன்” – சிராஜ் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து இந்திய அணி, 336 ரன்கள் அடித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்கள் அடித்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் சிராஜ் தலா 5 விக்கெட்களும், ஷர்த்துல் தாக்குர் தலா 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள்.
அதில் முகமது சிராஜ் 19.5 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் லாபஸ்சேன், ஸ்மித் விக்கெட்டுகளும் அடங்கும்.

இந்நிலையில் நேற்று நடந்த நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் சிராஜ், “எனது தந்தை உயிரோடு இருந்தால், அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவரது ஆசிர்வாதத்தால் நான் தற்போது ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன். எனது தந்தை இருந்திருந்தால் நான் நிச்சியம் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “என் தந்தை மறைவிற்கு பின் எனக்கு ரொம்ப கடினமாக இருந்தது. எனது அம்மாவிடம் பேசி நான் தைரியத்தை பெற்றுக் கொண்டேன். இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்ற எனது தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் நான் முழு கவனமாக இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி, 324 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் களமிறங்கவுள்ளது. 1-1 என இரு அணிகளும் சமமாக உள்ளதால், இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகியுள்ளது.