உளவு பார்ப்பதால் எனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிவிட்டேன் – முதல்வர் மம்தா பானர்ஜி

நாட்டின் ஜநாயகத்தை பெகாசஸ் உளவு மென்பொருள் கைப்பற்றியுள்ளது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான இன்று அம்மாநிலத்தில் உள்ள மக்களிடம் காணொலி மூலம் உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.

இதன்பின் பேசிய அவர், நாங்கள் பணம், அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து போராடி உள்ளோம். அனைத்து தடைகளையும் தாண்டி, மக்கள் எங்களுக்கு வாக்களித்ததால், ஆட்சிக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டு மக்களின் ஆசியை பெற்றுள்ளோம்.

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை அனைத்தையும் பெகாசஸ் தற்போது கைப்பற்றியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதனால் சரத் பவார், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கோவா முதல்வர் ஆகியோரிடம் என்னால் பேச முடியவில்லை.

கண்ணுக்கு தெரியாத பொருளை என் அலைபேசியில் பொருத்தியுள்ளார்கள். எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டது. பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரதமர் மோடி அரசு உளவு பார்ப்பதால் எனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிவிட்டேன். இதுபோன்று பாஜக அரசையும் ஒட்டவேண்டும்.

உளவு பார்ப்பதற்கு பணம் செலவு செய்யப்பட்டதே தவிர, மக்களுக்கு பணம் செலவு செய்யப்படவில்லை. எனவே, மத்திய அரசை அடக்கி வைக்க வேண்டும். இல்லை எனில் நாட்டை அழித்துவிடுவார்கள். இதற்குக் காரணமான மத்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கட்டமாக பேசியுள்ளார்.

பெகாசஸ் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஜூலை 27 அல்லது 28ஆம் தேதிகளில் டெல்லிக்கு செல்ல உள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் கலந்து கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் விவாதப் பொருளாகி மாறியுள்ளது.

எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்து, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்திருந்த போதிலும், பெகாசஸ் விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்