பாஜக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது – மேற்கு வங்க முதல்வர் மம்தா

‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வரும் நிலையில் ,பாஜக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். 

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.ஆனால் இந்த சட்டங்களுக்கு ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனை திரும்பப்பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் டெல்லி நோக்கி குருகிராமில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலையில் பேரணியில் இன்றும் 2-வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.இந்த பேரணியில் போலீசார் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் வந்ததால் ,போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பேரணியில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் மீதான போலீசாரின் நடவடிக்கையை  கண்டித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி ,மேலும் இது குறித்து கூறுகையில், பாஜக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது. மேலும் அவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது பாஜக.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் சேரத் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.