Sister Vaishali

10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒன்றை நான் கண்டேன்..! பிரக்ஞானந்தா வரவேற்பு குறித்து சகோதரி வைஷாலி நெகிழ்ச்சி.!

By

உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில், மலர்கள் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவை விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் பூங்கொத்துக்கொடுத்து வரவேற்றனர்.

செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பை பார்த்து அவரது சகோதரி வைஷாலி நெகிழ்ச்சியடைந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “10 ஆண்டுகளுக்கு முன்பு, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் தாயகம் திரும்பிய போது இதுபோன்ற வரவேற்பை நான் கண்டேன். தற்போது அதே போன்ற வரவேற்பு பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்துள்ளது.” என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

மேலும், “பிரக்ஞானந்தா அனைத்து மக்களிடமும் அன்பை பெறுவதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.” என்று கூறினார். சென்னை வந்தடைந்த பிரக்ஞானந்தாவை மேள தாளங்கள் முழங்க திறந்த வெளி வாகனம் மூலம் ஊர்வலமாக கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, நேரு விளையாட்டு அரங்கில் பிரக்ஞானந்தாவுக்கு தேநீர் விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டுக்களை பெற உள்ளார். மேலும், உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை  வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.