சுவையான இனிப்பு மோதகம் செய்வது எப்படி?

மோதகம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக் கூடிய ஒன்று தான். தற்போது இந்த பதிவில் சுவையான மோதகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை 
  • அரிசி மாவு – 4 கப்
  • கடலைப் பருப்பு – 2 1/2 கப்
  • வெல்லம் – அரைக் கிலோ
  • தேங்காய்த்துருவல் – 2 1/2 கப்
  • உப்பு – ஒரு தேக்கரண்டி

பூரணம் செய்முறை

முதலில் கடலை பருப்பினை சுமார் ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பின் ஊறிய பருப்பு நன்கு குலைய வேக வைத்து நீரை வடிகட்ட வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் அலுத்து பிசைய வேண்டும். பருப்பு ஒன்றிரண்டாக நசுங்கி, அரைத்தது போல் வரவேண்டும்.

அதன் பின் இதனுடன் வெல்லத்தை போட்டு நன்கு தட்ட வேண்டும். பிறகு துருவிய தேங்காயை வெறும் வாணலியில் போட்டு லேசாக சிவக்க வதக்கி எடுத்து, இதனுடன் சேர்க்க வேண்டும். பின் இதனுடன் ஏலக்காய், வறுத்த முந்திரி, பொரித்த கிஸ்மிஸ் எடுத்து பூரணத்தோடு சேர்த்து பிசைய வேண்டும்.

செய்முறை

முதலில் அரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவினை போட்டு, அதில் இரண்டு கப் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியின் பின்புறத்தைக் கொண்டு அழுத்திக் கிளறிவிட வேண்டும். பிறகு மீதமிருக்கும் தண்ணீரையும் அளவாக ஊற்றி, கைகளால் பிசைந்து, மாவு மிருதுவாக இருக்குமாறு செய்ய வேண்டும்.

அதன்பின் எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உள்ளங்கையில் வைத்து சற்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு கைகளால் அழுத்தி அதனைக் கிண்ணம் போல் செய்ய வேண்டும். அதனுள்ளே சிறிது பூரணத்தை வைக்க வேண்டும்.

பின்னர் அதன் ஓரங்களை, விரும்பிய வடிவில் அழகாக ஒரே அளவாக மூட வேண்டும். பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் அடுக்கி, பானையில் வைத்து வேகவிட வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து கொழுக்கட்டை வெந்த உடன் எடுத்து விடலாம். இப்பொது சுவையான இனிப்பு மோதகம் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.