வாயில் வைத்த உடனேயே கரையும் சூப்பரான அல்வா செய்வது இவ்வளவு சுலபமா?

வாயில் வைத்த உடனேயே கரையக்கூடிய சுவையான அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

பொதுவாகவே இனிப்பு என்றால் மனதும் நிறையும், முகத்திலும் மலர்ச்சி உண்டாகும். அதன் காரணத்தினாலேயே எந்த ஒரு நல்ல காரியம் துவங்கினாலும் வீட்டில் இனிப்பு செய்வது வழக்கமாக இருக்கும். அதேபோல் வீட்டில் ஏதும் நல்ல காரியம் நடந்தாலும், கல்யாணம், காது குத்து என எந்த விஷேசமாக இருந்தாலும் இனிப்பு வைத்து விட்டு தான் அடுத்த பலகாரங்கள் வைப்பார்கள். அதன்படி இனிப்பை எடுத்து சாப்பிட்ட உடனேயே மனதும் மகிழ்ச்சி அடையும். பொதுவாகவே கல்யாண வீடுகளில் வாயில் வைத்தாலே கரையும் அளவிற்கு இருக்க கூடிய இனிப்பான அசோகா அல்வா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – 200 கி, கோதுமை மாவு – 200 கி, நெய் – 100 மில்லி, சர்க்கரை – 400 கி, கேசரி பவுடர் – 1 சிட்டிகை, ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 15.

செய்முறை: முதலில் அடுப்பை பற்ற வைக்க வேண்டும். அதில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவு பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். பாசிப்பருப்பை நன்கு பொன்னிறம் வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும். வறுத்த பாசிப்பருப்பை வேற கிண்ணத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். இதில் 3 அல்லது 4 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். இது அரை மணி  நேரம் வரை ஊற வேண்டும். பின்னர் ஊறவைத்த பாசிப்பருப்பை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். இது வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு வெந்திருக்கும் பருப்பை வேற பாத்திரத்திற்கு மாற்றி அதனை ஆற வைக்க வேண்டும்.

ஆறிய பிறகு இதனை மிக்ஸியில் சேர்த்து நல்ல பேஸ்ட்டாக அரைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து 4 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு கோதுமை மாவை சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். வறுத்த பின்னர் இதனை வேற தட்டிற்கு மாற்ற வேண்டும். பின்னர் அதே வாணலியில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை கரைய தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். சர்க்கரை தண்ணீர் கம்பி பதம் வந்தவுடன் நீங்கள் வறுத்து வைத்துள்ள கோதுமை மாவு மற்றும் அரைத்துள்ள பாசிப்பருப்பு இரண்டையும் பாகில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இதனை அடுப்பில் இடைவிடாது கிளறுவது தான் மிகவும் முக்கியம். அப்போது தான் அசோகா நன்கு மென்மையாக வாயில் வைத்த உடனேயே கரையும் வண்ணம் இருக்கும். அதனால் அடுப்பை மிதமான சூட்டல் வைத்து கிளறுங்கள். பிறகு இதில் ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் இரண்டையும் சேர்த்து கலக்க வேண்டும். மேலும் இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கிளறும்போது அல்வா பதம் வந்தவுடன் கடைசியாக முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான வாயில் கரையும் அசோகா அல்வா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here