,

குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் ஆலு கோபி சுவையாக செய்வது எப்படி?

By

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் ஆலு கோபி சூப்பராக செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.  

பொதுவாகவே வறுவல் என்றால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் ஆலு கோபி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். இருந்தாலும் கடைகளில் சென்று சாப்பிடும் சுவை வீட்டில் இருக்காது என்பதால் அனைவரும் கடைகளில் கிடைக்கும் உணவுகளையே விரும்புகின்றனர். வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சூப்பராக ஆலு கோபி செய்யலாம். அதனை எப்படி செய்ய வேண்டும் அதற்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – இரண்டு, காலிஃபிளவர் – 1, உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – ஐந்து ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், பெருங்காயத் தூள் – 1/4 ஸ்பூன், வரமிளகாய் – மூன்று, கடுகு – 1/2 ஸ்பூன், காஷ்மீரி சில்லி பவுடர் – 1 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பின்னர் அடுப்பை நிறுத்தி கொள்ளுங்கள். அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவர் இரண்டையும் சேர்த்து 10 நிமிடம் வரை ஊற வைத்து கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவர் இரண்டையும் எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு ஏற்கனவே வெந்து இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவர்சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொள்ளுங்கள். மிதமான சூட்டில் பத்து நிமிடம் வேக வைத்து கொள்ளுங்கள். பின்னர் இதில் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். நன்கு அனைத்தும் வெந்த பிறகு, அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவு தான் சூப்பரான ஆலு கோபி ரெடி.

Dinasuvadu Media @2023