#IPL2021: “ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் வீட்டிலே இருக்கின்றனர்; இல்லையென்றால்..”- பிசிசிஐ!

ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் பலரும் வீட்டிலே இருக்கின்றார்கள். இல்லையென்றால், அவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்று வருவார்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலுக்கும் மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர்கள் குணமடைந்து மீண்டும் அணியுடன் இணைந்தனர்.

அந்தவகையில், கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோர் வெளியேறினார்கள். இதனால் அணி நிர்வாகம் திணறி வருகின்றது. இன்று இரண்டு அம்பயர்கள் தொடரில் இருந்து வெளியேறினார்கள்.

வீரர்கள், ஊழியர்கள் என பலரும் கொரோனா அச்சம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிவரும் நிலையில், ஐபிஎல் தொடரை ரத்து செய்யவேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர், Reuters ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர்,

“ஐபிஎல் தொடரை நடத்துவது, இப்பொழுது மிகவும் முக்கியமானது. பல எதிர்ப்புகள் வந்தாலும், பொருளாதாரத்திற்கு கணிசமான பணத்தை உருவாக்குகிறது இந்த ஐபிஎல் லீக் தொடர். அதை இந்த சூழலிலிருந்தும் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரை நிறுத்துவைப்பது, எவ்வாறு உதவும்?” என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், “ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் பலரும் வீட்டிலே இருக்கின்றார்கள். இல்லையென்றால், அவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்று வருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.