34 C
Chennai
Saturday, July 24, 2021

நடத்துனராக இருந்த ரஜினிகாந்த் அரசியலில் காலடி எடுத்து வைத்தது எப்படி?

பள்ளிப்படிப்பை முடித்த ரஜினிகாந்த், நடத்துனராக தனது வாழ்க்கையை தொடங்கி, நடிப்பில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, தற்போது அரசியல் காலத்தில் காலடி எடுத்து வைத்தது எப்படி?

சிவாஜி ராவ் கைக்வாட் என்ற இயற்பெயரை கொண்ட ரஜினிகாந்த், டிசம்பர் 12ஆம் தேதி 1949ஆம் ஆண்டு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ராமோசி ராவ் – ரமாபாய் தம்பதியினருக்கு நான்காவது மகனாக ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர்.

பள்ளி பருவம்

இவர் தன்னுடைய ஐந்து வயதில் தாயை இழந்த நிலையில், பெங்களூரில் உள்ள ஆச்சாரிய பாடசாலை மற்றும் விவேகானந்த பாலக சங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் தனது சிறு வயது முதற்கொண்டே துணிச்சல் மிக்க ஒரு நபராக வாழ்ந்து வந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின், தன்னுடைய வாழ்க்கையை ஒரு நடத்துனராக தொடங்கினார். அதன் பின் பல மேடை நாடகங்களில் நடித்தார். காலப்போக்கில் நடிப்பின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தடைந்தார்.

திரைப்பயணம்

சென்னைக்கு வந்த அவர் பல இன்னல்களுக்கு மத்தியில் தனது நண்பனின் உதவியோடு சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அதன்பின் 1975ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த, ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தனது திரையுலக வாழ்வை தொடங்கினார். அதன்பின் தொடர்ந்து கன்னட திரைப்படத்தில் நடித்திருந்தார். 1977 ஆம் ஆண்டு நடித்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என்ற திரைப்படம் தான் ரஜினிகாந்தின் திரை வாழ்வில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது மிகப்பெரிய உழைப்பால் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் அளவிற்கு திரைப்பட உலகில் வெற்றி சிகரத்தில் ஏறினார். இவர் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பதிவு செய்தார்.

திருமண வாழ்க்கை

தில்லுமுல்லு என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது லதா ரங்காச்சாரியை முதன்முதலாக சந்தித்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது, ரஜினியை பேட்டி எடுக்க அவர்கள் சென்றிருந்தார். அந்தப் பேட்டியின் போதே, ‘தன்னை மணக்க விருப்பமா?’ என்று ரஜினிகாந்த் கேட்க, வெட்கத்தோடு பெற்றோரிடம் கேளுங்கள் என்று லதா சொல்லி விட்டார். பிறகு ஜி.மகேந்திரன் உதவியுடன் லதாவின் பெற்றோரிடம் சம்மதம் பெற்றார். பின் 1981ஆம் ஆண்டு லதாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

அரசியல்

நீண்ட நாட்களாக ஒரு நடிகராக இருந்த ரஜினிகாந்தை அரசியல் தலைவராக பார்க்க விருப்பப்பட்ட ரசிகர்கள், அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் தமிழக சட்டசபை தேர்தலின்போது அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவங்குவேன் என்று, இரண்டு வருடங்களுக்கு முன்பாக அறிவித்திருந்த ரஜினிகாந்த், கொரோனா  தொற்று பரவல் காரணமாக அரசியலுக்கு வருவாரா? என்ற சந்தேகம் வந்தது. இதனை அடுத்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும் ட்விட்டர் வாயிலாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியை உச்சத்துக்கே கொண்டு சென்றது. மேலும் கட்சியைப் பதிவு செய்யும் போது அதன் பெயர் என்ன என்று விவரம் மக்களுக்கு தெரியவரும் என்றும், இந்தப் பெயரை ரஜினிகாந்த் தான் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

தனக்கென தனி பாதையை அமைத்து, இன்று திரை உலக மேடையில் அசைக்கமுடியாத தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் ரஜினிகாந்த் .  நிஜ வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார். என்னதான் பணம் புகழ் அந்தஸ்து என அனைத்திலும் நிறைவாய் இருந்தாலும், இன்றுவரை ஒரு சாதாரண மனிதனாக வலம் வருவதே இவரது வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் என்று பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது 70 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Latest news

Related news