நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு – அமைச்சர் சக்கரபாணி

குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் விளக்கம்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, திமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பொய் பரப்புரை மக்கள் மன்றத்தில் தோற்கும்.

திமுக ஆட்சியில் வழங்கபட்டு வந்த பொங்கல் பரிசு தொகுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு என்ற பெயரில் பணம் வழங்கப்பட்டது. ஆளும் அரசை குறைகூறும் நோக்கத்தில் ஓபிஎஸ் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஆதாரங்களுடன் நேரில் வந்தால் பதிலளிக்க தயார் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களில், ஒருசில பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர். இதற்கு சமீபத்தில் முதல்வரும் விளக்கம் கொடுத்த நிலையில், தற்போது அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.