தமிழகத்தில் “வீடு தேடி பள்ளிகள்” – பள்ளிக்கல்வித்துறையின் புதிய திட்டம்…!

தமிழகத்தில் “வீடு தேடி பள்ளிகள்” என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தவுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,தமிழகத்தில் உள்ள மழலையர் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தவுள்ளது.

அதன்படி,ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இருப்பிட பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும், பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக,வீதி வகுப்பறை என்ற பெயரில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த திட்டத்தை அக்டோபர் மாதத்திலிருந்து செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி,இத்திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.