4 கரீபியன் நாடுகள் மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆன்டிகுவா & பார்படா, டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் ஆகிய 4 கரீபியன் நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்கள் சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் வரலாற்று தருணத்தில் பங்கெடுத்தனர்.

’சோகா இசையின் அரசன்’ (King of Soca) என புகழப்படும் சர்வதேச பாடகர் திரு.மெச்சல் மோண்டனோ (Machel Montano) இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் தனது இசையின் மூலம் மண் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏராளமான மக்களிடம் கொண்டு செல்ல உறுதி ஏற்றுள்ளார்.

ஆன்டிகுவா & பார்படா நாட்டின் பிரதமர் திரு. காஸ்டன் பிரவுன் பேசும் போது, ”மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மண் வளம் இழந்து அழிவை நோக்கி செல்கிறது. இது நாம் வாழும் பூமிக்கு எதிரான மாபெரும் அச்சுறுத்தல் ஆகும். 30 வருடங்களுக்கு முன்பு பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக கண்டறியப்பட்டது. அப்போது எங்களுடைய கரீபிய நாடுகள் தான் அந்தப் சுற்றுச்சூழல் பிரச்சினையை எதிர்த்து போரிடுவதில் முன்னணியில் இருந்தோம். அதேபோல் இப்போது, மண் வள அழிவை தடுக்கும் முயற்சியிலும் நாங்கள் தொடக்கத்திலேயே இணைந்து உள்ளோம்” என்றார்.

டொமினிகா நாட்டின் பிரதமர் திரு. ரூஸ்வெல்ட் கெர்ட் பேசுகையில், “இவ்வியக்கத்திற்கு எங்களுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். விவசாயம் சிறப்பாக நடந்தால் தான் மக்களுக்கு உணவு அளிக்க முடியும். அதற்கு அடிப்படையாக இருக்கும் மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்று” என்றார்.

செயின்ட் லூசியா நாட்டின் பிரதமர் திரு. பிலிப் ஜே பெர்ரி பேசுகையில், “எங்கள் நாட்டின் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில் நாங்கள் இருக்கிறோம். அதற்கு இந்த மண் காப்போம் இயக்கத்தின் முன்னெடுப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்றார்.

செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் நாட்டின் பிரதமர் திரு. திமோதி ஹாரீஸ் பேசுகையில், “பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் நலமாக வாழ மண் வளம் அவசியம். அதை கவனத்தில் கொண்டு தான் இந்த முன்னெடுப்பு கரீபியன் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.

இது குறித்து சத்குரு கூறுகையில், “கடலில் இருக்கும் முத்துக்களை போல் விளங்கும் இந்த சிறிய நாடுகள் மண் வளத்தை மீட்டெடுக்க உறுதி எடுத்துள்ளன. பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களின் நலனிற்காக ஒவ்வொரு நாடும் மண் வளத்தை காட்டாயம் காக்க வேண்டும்; காக்க முடியும் என்பதற்கு இந்நாடுகள் சிறந்த எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளன” என்றார்.

மேலும், “நம் உயிர் வளர்ச்சிக்கு காரணமானவற்றுடன் நாம் நமக்கான தொடர்பை இழந்து நிற்கிறோம். மண் என்பது உயிரற்ற ஒரு பொருள்; அதை எப்படி வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது தவறான அணுமுறை. மண்ணுக்கு உயிர் உள்ளது. இளைஞர்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் நாம் சொல்ல வேண்டிய முக்கியமான செய்தி – மண்ணுக்கும் உயிர் உள்ளது.” என்றார்.


புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் மேற்கண்ட 4 நாடுகளின் வேளாண் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் சுகாதார துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். 4 நாடுகளின் தலைவர்களுக்கும் கரீபியன் நாடுகளின் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் அடங்கிய புத்தகத்தை சத்குரு வழங்கினார். இதில் கூறப்பட்டுள்ள தீர்வுகள் சர்வதேச விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி அந்தந்த நாடுகளின் தட்பவெப்ப சூழல் மற்றும் வேளாண் முறைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

author avatar
Castro Murugan