மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகள் வாங்க தடை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் இயங்கவில்லை என்றும் அவர்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் வைஷ்ணவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, 10% மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தான் பேருந்துகள் கொள்முதல் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும்,  இது மாற்றுத்திறனிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் குறிப்பிட்ட பேருந்துகள் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படுவதகவும், மோசமான சாலைகளை முழுமையாக மேம்படுத்திய உடன் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டப்படியும், உயர் நீதிமன்றம் உத்தரவின் படியும் மற்ற பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என  விளக்கமளித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் ஒரு பேருந்து கொள்முதல் செய்யப்படுவதற்கு ரூ.58 லட்சம் வரை செலவாகும். நிதி நெருக்கடி காரணமாக 10% பேருந்துகள் மட்டும் தற்போது கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும், இந்தியா ஒரு ஏழை நாடு என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் வாதமாக முன்வைத்த பிறகு,  இந்திய ஆட்சியாளர்கள் ஏழைகளாக இருக்கிறார்களா? என்றும் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகள் எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

அதேநேரத்தில் மாற்றுத்திறனாளிகளின் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு ஆணைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் வாங்க வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் மாற்றுத்திறனிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்