தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை..!வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர்,  திண்டுக்கல், தென்காசி, தேனி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் 16, 17, 18 ஆகிய நாட்களில் மேற்கண்ட மாவட்டங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பொழிய வாய்ப்புள்ளது.

ஜூன் 19 ஆம் தேதி கடலோர மாவட்டங்களிலும் அருகில் இருக்கும் இடங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களில் வறண்ட சூழ்நிலையே  நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா,  வங்கக்கடல் பகுதியில் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசவுள்ளது. இன்றிலிருந்து ஜூன் 18 வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் காற்று வீச உள்ளது. இன்றிலிருந்து ஜூன் 19  வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசவுள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவித்துள்ளது.