#GTvRCB: விராட் கோலி அரைசதம்.. குஜராத்துக்கு 171 ரன்கள் இலக்கு!

இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

ஐபிஎல் தொடரின் இன்றைய 43வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களுரு அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் டு பிளெசிஸ் டக் அவுட்டானார். இதன்பின் விராட் கோலி மற்றும் இந்தாண்டு முதல் போட்டியில் களமிறங்கியுள்ள ரஜத் படிதார் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதில் சிறப்பாக விளையாடிய கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்து, 53 பந்துகளில் 54 ரன்கள் அடித்த நிலையில், விக்கெட்டை இழந்தார். இவரை தொடர்ந்து படிதார் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களம்கண்ட பெங்களூரு அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை குஜராத் பந்துவீச்சாளர்களிடம் பறிகொடுத்தனர்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 170 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 54, ரஜத் படிதார்  52 ரன்களை எடுத்தனர். குஜராத் அணி பந்துவீச்சை பொறுத்தளவில் பிரதீப் சங்வான் 2, மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில், 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்